Monday, February 03, 2014

மிளகாய் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.  அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற  மாநிலங்களில் புசேரியம் வாடல் நோய் மிளகாய் பயிரை அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த வாடல் நோய் தமிழகத்தில் சாகுபடி செய்யும் மிளகாய் பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது.
   இந்த வகை வாடல் நோய் புசேரியம் சோலானி, நெக்ட்டிரியா ஹேமடோகோக்கா ஆகிய பூசணங்களால் உண்டாக்குகிறது. செடியின் எவ்வித வளர்ச்சி பருவத்திலும் இந்நோயின் பாதிப்பு ஏற்படலாம். மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஈரத்தன்மை குறையும் பொழுது, கோடைகாலங்களில் நீர்ப்பாசனம் இல்லாமல் மண் இறுகி விடுவதாலும் இந்நோய் தீவிரமடைகிறது.
   தோட்டத்தில் தாக்கப்பட்ட செடிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாடத்துவங்கும். இந்நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் வெளிர்பச்சை நிறமடைந்து கீழ்நோக்கி தொங்கும். தாக்கப்பட்ட செடிகளின் மேல்  நுனி இலைகள் தளர்ந்து வாடி சரியாக நீர்ப்பாய்ச்சாதது போல் தோற்றமளிக்கும் இந்நோய் தாக்கி முதலில் வாடும் செடிகளின் முதலில் வேர்களில் எவ்வித மாற்றமும் செடிகளின் தண்டுபகுதிகளை நீள்வாட்டில் வெட்டினால் உள்ளே திசுக்கள் பழுப்பு நிறமாக மாறியிருப்பதைக் காணலாம்.
    விவசாயிகள் இந்நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றலாம். உழவு செய்து நிலத்தை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தரிசாக விடலாம். ஒரு எக்டருக்கு சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் எனும் பயிர் ஊக்கி பாக்டீரியாவை 2.5 கிலோவை ஐம்பது கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு நிலத்தில் இடவும்
    நோய் தாக்கிய வயலில் இரண்டரை கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது கார்பண்டாசியம் 0.1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து  செடியின் அடிப்பாகத்தில் ஊட்டலாம். நோய் முற்றிய நிலையில் தாக்கப்பட்ட செடிகளையும், செடிக் கழிவுகளையும் எரித்து அழித்து விட வேண்டும். நோயுற்ற வயலில் பயன்படுத்த உழவியல் கருவிகளை பிளீச்சிங் பவுடர் கலந்து நீரில் தொற்று நீக்கம் செய்யவும். மிளகாய் நாற்றுகள் நோயற்ற நாற்றங்கால்களில் வளர்க்கப்படுதல் அவசியம். நோய்க்காரணி ஒருமுறை நிலத்தில் வேரூன்றிவிட்டால் நோயை கட்டுப்படுத்துவது அவசியம். நோய்த் தாக்கிய வயலில் மிளகாயை மீண்டும் பயிரிடக்கூடாது. மேலும் நோய் கண்ட நிலத்தில் தக்காளி, கத்தரி, உருளை இவற்றை பயிரிடுவதைத் தவிர்க்கவும். நெல், மக்காச் சோளம், பருத்தி இவற்றை நீண்டகால சுழற்சியில் கடைபிடிக்கவும்.இந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி மிளகாய் சாகுபடியில் நல்ல விளைச்சலையும், அதிக வருமானத்தையும் பெறலாம்.

No comments: