Tuesday, October 09, 2018

நாம் இழந்து(மறந்து)விட்ட மரவகைகளுள் முக்கியமான ஒன்று - இலுப்பை !!

சின்ன வயதில் எங்கள் வீட்டில் முழுச்சமையலும் இலுப்பை எண்ணெயில்தான்.

இலுப்பைவிதையை சேகரித்து. காயவைத்து, தரையில் பரப்பி அதன்மீது உரலை நிற்க்கவைத்து சுற்றும்போது கடினமான மேல் ஓடு உடையும் . பின்னர் கைகளால் உடைத்து தோல் நீக்கி, காயவைத்து.
செக்கில் கொடுத்து ஆட்டி எண்ணையாக்கி. சூடுபடுத்தி முற்றிய தேங்காய்பால்விட்டு முறிப்பார்கள்.
பின் மேலாக எடுத்து மண்பானையில் வைத்துவிட்டால் அடுத்த ஓர் ஆண்டுக்கு சமையலுக்கு அதுதான்.
நெய்போலாகிவிடும்.

காரக்குழம்பு வைத்து சாப்பிடும்போது அலுமினியகுழிக்கரண்டியால் அரைக்கரண்டிவிட்டு சாப்பிடுவார் அப்பா. 90 வயதை கடந்து இன்னமும் கிராமத்தில் ஆரோக்கியமாய்.

எண்ணெய்சாப்பிடுவது உடலுக்கு கெடுதி என போதித்த நவீனயுகத்தில் 33 வயதிலேயே சர்க்கரையும் அதன்பங்காளிகளும் என்னோடு.

பணப்பயிர்களான வேர்க்கடலை.தென்னை வந்தபின் இலுப்பை மரங்கள் வெட்டப்பட்டன.

இலுப்பைப்பூவாசம் சுவாசிப்பது இதயத்தை பலப்படுத்தும்.

இலுப்பை புண்ணாக்கு தலைக்கு தேய்த்துகுளிக்க பயன்படும்.

முற்றிய மரம் தேர் செய்ய பயன்படும்.

பார்ப்பதற்கு சப்போட்டாபோலவும் 
உருவத்தில் ஆல்,அரசு போலவும்வளரும் இலுப்பை மருத்துவகுணம் கொண்டது.

மரத்தின் தழையை ஆடு விரும்பி சாப்பிடும்.
"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை"
என்றபொன்மொழியும் உண்டு.

இலுப்பைப்பூவில் பாட்டி செய்துதரும்'கில்கட்டி' என்ற இனிப்பு சிறப்பானது.(இதன் செய்முறை தெரிந்த யாரேனும் பதிவிட்டால் புண்ணியமாபோகும்)

மழையை ஈர்க்கும் தன்மைகொண்ட இம்மரங்களை மீட்கும் முயற்சியாக எங்கள் பசுமை ஆர்வலர் சிறார்ப்படை சென்னை மாநகராட்சியோடு சேர்ந்து இலுப்பை விதை பயிரிடும் விழாவில் ஈடுபட்டனர்.

பாரம்பரியம் காப்போம் .
ஆரோக்கியம் பேனுவோம்.

No comments: