Tuesday, January 28, 2014

இந்திய இயற்கை உரங்களில் கண் வைத்துள்ளது சீனா


மென்பொருள்கள், பட்டு மற்றும் இரும்புத்தாது ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதில் சீனா அதிக ஆர்வம் காட்டுகிறது.கர்நாடக மாநிலம், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும், மல்டிபிளக்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு 200 டன் அளவிலான இயற்கை உரங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த இயற்கை உரங்கள், தென்னை நார், மண்புழு உரம் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டவை.சீனா தன் நாட்டின் செழுமை, மண்ணின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தி, விவசாய உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது. இயற்கை உரங்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக உயிரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, சீனா, தன் நாட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை பெற விரும்புகிறது. இதுகுறித்து, மல்டிபிளக்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.பி.ஷெட்டி கூறுகையில், "இந்தியாவில் இருந்து இயற்கை உரங்களை பெற சீனா ஆர்வமாக உள்ளது. எங்கள் நிறுவனம், 200 டன் அளவிலான இயற்கை உரத்தை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. சீனா, உரங்களின் விலை தொடர்பாக பேரம் பேசினாலும், அங்கு நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன' என்றார். தாவரங்களுக்கு ஊட்டமளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை, இயற்கை உரங்கள். இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கான முக்கிய பொருட்கள் தென்னை நார், மண்புழுக்கள், வேப்பங்கொட்டை ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகின்றன

No comments: